டேய் கணேஷ் என்ன புத்தகம் வாங்கியிருக்க...?' 'எல்லாம் நம்ம வாத்தியாரோடது தான் வசந்த்...' சுஜாதா நினைவு தின சிறப்பு பகிர்வு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாத்தியார் என அன்போடு அழைக்கப்படும் சுஜாதாவிற்கு தமிழ் இலக்கிய உலகில் வாசகர்கள் ஏராளம். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன். ஆனால் சுஜாதா என்னும் பெயரிலேயே நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் உரைநடையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் சுஜாதா. தமிழ் வாசகப் பரப்பில் பெரும் புகழ் பெற்றிருந்தாலும், இலக்கிய உலகம் சரியான அடையாளத்தை தரவில்லை. காரணம் சிற்றிதழ் மரபின் வழியாக இலக்கிய உலகம் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் வெகுஜன இதழ்களில் எழுதி வாசக பரப்பை பெரிய அளவில் உருவாக்கியிருந்தார். அதை தெரிந்துக்கொண்டே அவராக செய்து வந்தார்.
சுஜாதா அவர்கள் சிற்றிதழ் சார்ந்து இயங்கவில்லை என்றாலும், நிறைய இலக்கிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கான செயல்படும் தளத்தை அமைத்துக் கொடுத்தார். மேலும் உலக இலக்கிய மேதைகளை தொடர்ந்து கற்றதும், பெற்றதும், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் உள்ளிட்ட தொகுப்புகளின் வாயிலாக அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் அவர்களை எளிதாக தன் வாசக பரப்பிற்கு கொண்டு போய் சேர்த்த அரும்பணியை செய்தார்.
சுஜாதாவிற்கு தமிழ் இலக்கிய உலகில் இவ்வளவு வாசகர்களை பெறுவதற்கான காரணம் அவரது நடைதான். அந்த நடையில் இருக்கும் பகடி தொனி வாசகர்களை நாளுக்குநாள் அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. மேலும் தமிழில் ட்விஸ்ட் எனப்படும் கதையின் சுவாரஸ்ய உத்தியை தமிழில் அறிமுகப்படுத்தியதும் அவர் தான். இந்த புனைவு தொழில்நுட்பம் மேற்கில் ஜெஃப்ரி ஆர்ச்சர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கையாண்டனர். மேலும் கணேஷ், வசந்த் கதைகள், ஸ்ரீரங்கத்து கதைகள் போன்ற நூல்களும் இன்றும் புதிய வாசகர் பரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் அவரது நடையின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது சொற்பமே. ஆனால் அவரது நடையை தாண்டி ஒரு சொல்லை எழுதிவிட இன்றைக்கும் கடினமான விஷயம். வெறும் ஜனரஞ்சக கதைகளை தாண்டி "நகரம்" போன்ற தீவிர இலக்கியத்திற்கான கதைகளையும் எழுதி பார்த்திருக்கிறார். சுஜாதாவின் நாவல்களில் ‘கனவுத்தொழிற்சாலை’ ‘காகிதச்சங்கிலிகள்’ போன்ற நாவல்களையே இலக்கிய ரீதியாக அங்கீகாரத்தை அளித்தன.
குடும்பம், உறவுகள் என்று பல தளங்களில் எழுதினாலும் அவரோட ஏரியா என சொல்லப்படுவது அறிபுனைவு உலகம் தான். அறிவியல் வளர்ச்சி முன்னேற்றமடையாத காலத்திலும் , ஒரு எழுத்தாளன் என்ற முறையில் கற்பனையால் சிறந்த அறிவியல் புனைவு சார்ந்த படைப்புகளை எழுதினர். அது பலதரப்பட்ட வாசகர்களுக்கு சென்று சேர்ந்தது.
இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் பல சாதனைகள் செய்துள்ளார். இன்றைக்கும் சுஜாதா அவரகள் பணிபுரிந்த அனைத்து திரைப்படங்களும் மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்து தெரியும். அதற்கு காரணம் அதில் பேசப்படும் வசனம். அந்த படங்களில் வரும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவை. சினிமாவுக்குள் மட்டுமல்லாமல் சினிமாவை கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக "திரைக்கதை எழுதுவது எப்படி" என்ற நூலை எழுதியுள்ளார். அது எல்லா புத்தகக் கண்காட்சியிலும் "டாப் செல்லர்" நூலாக இருக்கிறது.
இவ்வாறு தமிழ் இலக்கிய உலகில் பெரும் சாதனைகளை செய்துள்ள சுஜாதா அவர்கள் 2008 பிப்ரவரி 27 அன்று காலமானார்.