உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தயாரிப்பான தென்னீரா பானம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்லடத்தில் தயாரிக்கப்படக்கூடிய பிரபல நீரா பானம் தென்னீரா.

இந்த பானத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொடக்க விழா தற்போது சென்னையில் நடந்திருக்கிறது. உலகத்தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ஏ.சக்திவேல் நிர்வாக இயக்குனர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் எம்.அங்கமுத்து உள்ளிட்டோர், தென்னீராவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த நிகழ்வில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (அபேடா) தலைவர் எம்.அங்கமுத்து பேசும்பொழுது தங்களுடைய ஆணையம் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் எல்லா மாநிலங்களிலும் அனைத்து பொருட்களுக்கும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக இந்திய பாரம்பரிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி கிராமப்புறங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்கிற பாரதப் பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் இந்த தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும் என்றும் லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதானமான பானமாக இந்த தென்னீரா விற்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தென்னீரா பானம் இறக்குமதியாளரும் ரீஜென்ட் வட அமெரிக்க நிறுவன மேலாண்மை இயக்குனருமான கதிர் குருசாமி, டாக்டர் வி.எஸ்.நடராஜன், சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆர்.டி.கார்த்திகேயன், அபேடா பொது மேலாளர் ஆர்.ரவீந்தரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்
