'அச்சமடைந்த மக்கள்'...'உங்க பணம் பாதுகாப்பா தான் இருக்கு'... 'பயப்பட வேண்டாம்'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று அபார வளர்ச்சி பெற்று வந்த லட்சுமி விலாஸ் வங்கி கடந்த 4 ஆண்டுகளாக கடும் சரிவைச் சந்தித்ததோடு, கடுமையான நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவித்து வருகிறது. நஷ்டம் அதிகரித்ததால் திவால் ஆகும் நிலைக்கு அந்த வங்கி தள்ளப்பட்டது. இதனையடுத்து வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்குப் பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்கக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. மருத்துவச் சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும். டிசம்பர் 16 வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியது.
இதனையடுத்து லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடையத் தேவையில்லை என வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. 2020ம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். எனவே லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மனோகரன் தெரிவித்துள்ளார்.
