'ஒருகாலத்துல எப்பேரு பட்ட நடிகர் அவரு...' அந்த குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா...! - முதல்வரிடம் மனு கொடுத்த பேரன்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தங்குவதற்கு வீடு வேண்டும் என தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் அவரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். மிக சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், கர்நாடக இசைப் பாடகராகவும் பன்முக திறமையைக் கொண்டவர். வெறும் 14 படங்கள் தான் நடித்திருந்தாலும் அவரின் எல்லா படங்களும் 1 வருடத்திற்கு மேல் திரையில் ஓடிகொண்டிருக்கும்.
அவர் நடித்த 14 படங்களில் 10 படங்கள் வசூலில் சாதனை படைத்தன. 'ஹரிதாஸ்', திரைப்படம் தொடர்ந்து 3 ஆண்டுகள் தியேட்டரில் ஓடி அந்த காலத்திலே சாதனை படைத்தது.
புகழின் உச்சி, செல்வ செழிப்போடு வாழ்ந்த பாகவதர் தனது 49 வயதில் மரணமடைந்தார். அதன்பின் அவரின் குடும்பத்தார் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு தனித்தனியே சென்றுள்ளனர்.
தற்போது எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் நேற்று (28-06-2021) முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்று அளித்த சம்பவம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், 'எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர். 2-வது மனைவி ராஜம்மாள் அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான்.
எங்கள் வீட்டில் 4 பேர், நாங்கள் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்து வந்தார்.
இப்போது நாங்கள் மிகுந்த பணக் கஷ்ட்டத்தில் உள்ளோம். நான் புகைப்பட கலைஞராகவும், வீடியோ படம் பிடிப்பவராகவும் இருந்தேன். அந்த உபகரணங்களை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தேன்.
ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக நானும் எங்கள் குடும்பத்தினரும் வேலையையும் இழந்துவிட்டோம். நான் செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன்.
எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டு வசதி வாரியத்தில் அரசு எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம். எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் வெளியாகி எம்.கே.தியாகராஜ பாகவதரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.