கொத்தாக மடிந்து விழுந்த 'காகங்கள்'... 'சீர்காழி' மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய "துயரம்"... சம்பவத்திற்கு பின்னுள்ள 'மர்மம்' என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் சுமார் இருநூறு மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக மீனவர்கள் கடவுளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பூம்புகார் மீனவர் காலனியில் சுமார் ஐம்பது காகங்கள் கரைந்து கொண்டிருந்த வேளையில் கொஞ்ச நேரத்திற்கு பிறகு அனைத்து காகங்களும் மண்ணில் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. சுமார் ஐம்பது காகங்கள் ஒன்றாக உயிரிழந்து மண்ணில் விழுந்த சம்பவம் மீனவ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மூன்று நாய்களும் உயிரிழந்துள்ளது. இதனால் மேலும் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் நாய்கள் மற்றும் காகங்களை உடனடியாக அப்புறப்படுத்தி மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கொண்டு சுத்தப்படுத்தினர். மர்மமான முறையில் காகங்கள் மற்றும் நாய்கள் இறந்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூம்புகார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
யாரேனும் விஷம் வைத்ததால் வந்த விளைவா அல்லது ஏதேனும் நோய் தொற்று காரணமாக நடந்ததா என போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.