'அரசு ஊழியர் முதல் சின்ன கலைவாணர் வரை'... 'சார், அவரு சாகல, அவர் நட்ட லட்சம் மரத்தை கேளுங்க'... 'பத்மஸ்ரீ விவேக்கின்' வாழ்க்கை பயணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 17, 2021 11:24 AM

தனது இறுதி மூச்சு வரை சமூகம் சார்ந்து சிந்தித்த நடிகர் விவேக்கின் மரணம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gone too early: Sorrowful condolences pour in for actor Vivek

“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக், 1961  ஆம் ஆண்டு நவம்பர் 19  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும். தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த விவேக், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார்.

அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

Gone too early: Sorrowful condolences pour in for actor Vivek

1987-ம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்த சின்னக் கலைவாணர், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார். இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

Gone too early: Sorrowful condolences pour in for actor Vivek

சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசியதோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு  ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி, பள்ளி கல்லூரிகள் எனப் பல இடங்களுக்குச் சென்று மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்தார்.

விவேக்கின் சேவையைப் பாராட்டிக் கடந்த 2009-ல் பத்ம ஸ்ரீ விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. இதனிடையே விவேக்கின் மகன் பிரசன்ன குமாரின் மரணம் அவரை நிலைகுலையச் செய்தது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் விவேக் தவித்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு நிற்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Gone too early: Sorrowful condolences pour in for actor Vivek

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். மக்கள் தங்கள் சோகங்களை மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த இந்த மாபெரும் கலைஞன், அவர் நட்ட ஒவ்வொரு மரத்தின் மூலம் நிச்சயம் நம்மில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

Tags : #ACTOR VIVEK

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gone too early: Sorrowful condolences pour in for actor Vivek | Tamil Nadu News.