தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மரணம்! அரசியல் தலைவர்கள் இரங்கல்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா. 73 வயதான இவர் சென்னை அண்ணாநகர் மேற்கு ஆபிஸர்ஸ் காலனியில் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் முன்னேறுவதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது உறவினர்கள் வந்த பின்னர், அண்ணா நகரில் அவரது இறுதி சடங்கு நடக்கவிருக்கிறது.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தம்முடைய இரங்கல் குறிப்பில், “முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும், காந்திய பற்றாளருமான நரேஷ் குப்தா (ஐஏஎஸ் ஓய்வு) அவர்களின் மரணச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உள்துறை செயலாளர், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்- செயலாளர் என பல உயர்மட்ட பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோல், தமிழக ஆளுநர் N.ரவியும் நரேஷ் குப்தா மரணத்தையொட்டி, இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், “மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக அனைவராலும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னாள் தலைமை அதிகாரி நரேஷ் குப்தா, 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பல்வேறு பரபரப்பான சூழலில் தமது கவனிக்கத்தக்க பணியை திறம்பட மேற்கொண்டார். காந்தியவாதியாக அறியப்படும் இவர், தேர்தல் நியாயமாக நடப்பதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக பெயர் பெற்றார். குறிப்பாக 2009 திருமங்கலம் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த பேச்சுகளை அடுத்து இன்னும் கடுமையான முடிவுகளையும் விதிகளையும் தமிழக தேர்தலில் அமல்படுத்துவதற்கு உறுதி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.