'என்னைப் பார்த்தா குரைக்கிற?'... 'தெருநாய்களை விஷம் வைத்து கொன்ற மனிதர்'... பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 26, 2019 06:46 PM

திருப்பூரில் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாக, மீன் வியாபாரி ஒருவர் மீது  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

fish salesman killed street dogs in tirupur people complained

திருப்பூர் கொங்கணகிரி 2-ம் வீதியை சேர்ந்த கோபால் என்பவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் மீன்களைப் பிடித்து அருகில் உள்ள மீன்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் தினந்தோறும் கோபாலை பார்த்து குரைத்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால் கோபம் கொண்ட கோபால் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி அப்பகுதியினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது மீன் இறைச்சியில் விஷம் கலந்து தயாராக கொண்டு வந்த கோபால், அதனை தெரு நாய்களுக்கு சாப்பிட வைத்ததாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மீன் இறைச்சியை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட நாய்கள் மயங்கி விழுந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததாக கூறி சி.சி.டி.வி. காட்சியையும் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் விஷம் கலந்த மீன் இறைச்சியை தெரு நாய் ஒன்றுக்கு சாப்பிட போடுவதும், அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த நாய் மயங்கி சுருண்டு விழுந்து இறப்பதும் பதிவாகி இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சிசிடிவி காட்சிகள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DOGS