ஐயா... எங்க வீட்ட காணோம்யா... !எப்படியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க... கலெக்டரிடம் மனு கொடுத்த பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரமத்திவேலூர் அருகே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறும் வீட்டை கண்டுபிடித்து தரும்படி, விவசாயி ஒருவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை ஒன்றியம் இருகூர் பஞ்சாயத்து பஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு மீனா (18) என்ற மகளும், பெரியசாமி (13) என்ற மகனும் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கும் முருகேசன், கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தார். அவரது மனுவை ஆய்வுசெய்த அதிகாரிகள், முருகேசன்-கவிதா தம்பதிக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர்.
தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அடிப்படை பணிகளை செய்ய அனுமதி வழங்கினர். முருகேசன் அஸ்திவாரம் அமைக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால், அதிகாரிகள் முருகேசனுக்கு வீடு கட்ட எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை பல முறை சந்தித்து மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, விவசாயி முருகேசன் அதிகாரியை சந்தித்த போது, உங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, இனி உங்களுக்கு வீடு கட்ட நிதி வழங்க இயலாது என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகேசன், கடந்த 20ம்தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம் புகார் மனு வழங்கினார்.
அந்த மனுவில், கடந்த 2010ம் ஆண்டு கான்கிரீட் வீடு போல கலைஞரின் கான்கிரீட் வீடு வழங்குவதற்கான தகுதியை பெற்றோம். ஆனால், இதுவரை அதிகாரிகள் யாரும், எனக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது கேட்டால் வீடு கட்டி கொடுத்தாயிற்று. மீண்டும் பணம் ஒதுக்கீடு செய்ய முடியாது என அதிகாரி கூறுகிறார். அதிகாரிகள் எனக்கு கட்டிக்கொடுத்ததாக கூறும் எனது வீட்டை காணவில்லை. அதனை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட தகுதி அட்டை குறித்து, எனது கவனத்திற்கு வரவில்லை. அப்போது நான் இந்த அலுவலகத்தில் பணியாற்றவில்லை. இதுகுறித்து முறையான புகார் வந்தால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.