மாசம் ரூ.1000 தரப்போறாங்களா.. முதல்வர் ஸ்டாலின் படத்துடன் வைரலாகும் விண்ணப்பம்.. அரசு தரப்பு விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் குடும்ப தலைவிகள் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தலைவிக்கு உரிமைத்தொகை
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, அதில் குடும்பத் தலைவிக்கான உரிமைத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.
மு.க.ஸ்டாலின்
இந்த சூழலில் கடந்த 13-ம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ‘பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம். யாரையும் ஏமாற்ற மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
போலி விண்ணப்பம்
இதனிடையே உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு விளக்கம்
கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது. அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வாறு எந்த விதமான விண்ணப்பமும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.