'பெண்களை அடிக்க மாட்டேன்.. அக்கறையா பேசி செயின் பறிப்பேன்!.. 175 சிசிடிவி மூலம் சிக்கிய 'செண்ட்டிமெண்ட்' கொள்ளையன் 'புறா' கார்த்திக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 17, 2019 06:49 PM

சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பிடிபட்டுள்ள தொடர்ச்சியாக தங்கச் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த புறா கார்த்திக், தனக்கு ஒரு கடமை பாக்கி இருப்பதாகவும், அதை முடித்துவிட்டு வந்து சிறைக்கு செல்ல தயார் என்றும் கேட்டுள்ளார்.

Chennai chain snatcher pura karthiks sentiment request

9-ஆம் வகுப்பு படித்துவிட்டு சென்னையில் வழிப்பறி, செயின் கொள்ளைகளை ஈடுபட்டு வந்த புறா கார்த்திக் தொடக்கத்தில் சென்னை தாதா காக்கா தோப்பு பாலாஜியின் டீமில் இருந்து பின்னர் சில காரணங்களாக விலகியுள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த புறா கார்த்திக்கிற்கு சிறு வயது முதலே நாய், புறாக்களை வாங்கி வளர்க்கும் ஆசை இருந்த நிலையில், மீண்டும் ஈரோடு ஜெயலட்சுமி என்பவரை மணந்து 7 மாத குழந்தையுடன் ஈரோட்டில் வாழத் தொடங்கினார்.

அப்போது தனது பலவருட ஆசையான புறாக்கள் மற்றும் நாய்களை வளர்க்கத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் நாய்களும் புறாக்களும் முறையான உணவின்றி இறந்தன. தனது தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் மனவருத்தத்துக்கு ஆளான புறா கார்த்திக், மனைவிக்கு தெரியாமல் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த பணத்தில் நாய்களையும் புறாக்களையும் வாங்கிச் செல்ல ஆரம்பித்தார். ஆனால் அவற்றுக்கு ஆகும் செலவையும், ஒரு நாளைக்கு 50 கிலோவுக்கு குறையாமல் தேவைப்படும் இறைச்சி வாங்கும் செலவையும் சமாளிக்க வழியில்லாமல் திணறிய புறா கார்த்திக் சென்னைக்கு அவ்வப்போது வந்து வழிப்பறி மற்றும் தங்கச் செயின்களை பறித்து, அவற்றை விற்று பணத்தைத் தேற்றிக்கொண்டு செல்வார்.

இதுபற்றி பேசிய புறா கார்த்திக்,  ‘சென்னைக்கு வந்ததுமே ஒரு புது பைக்கை திருடிக்கொண்டு கூட்டமாக பெண்கள் இருக்கும் இடங்களில் செல்வேன். விலங்குகளின் மீது அதிக பாசம் வைத்திருந்த நான் பெண்களை அடிக்காமல், துன்புறுத்தாமல் அவர்களிடம் அன்புடனும் அக்கறையுடனும் அரைமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரையிலாவது பேசி, அவர்கள் என்னை முழுதாய் நம்பி தங்கள் கதையைச் சொல்லும்போதுதான் வலிக்காமல் செயினை அறுத்துக்கொண்டு எஸ்கேப் ஆவேன். திருடிய பைக்கை ஏதாவது ஒரு பார்க்கிங்கில் விட்டுவிடுவேன். அடுத்த முறை வரும்போது பைக் அங்கேயே இருந்தால் பயன்படுத்திக்கொள்வேன். அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட் அணிவது என் வழக்கம். ஆனால் எனது விபரங்களை வைத்து 175 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து என் நம்பரை ட்ரேஸ் செய்து என் வீக்னஸை பயன்படுத்தி நாய்கள் விலைக்கு உள்ளதாகக் கூறி என்னை வரவழைத்து பிடித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளார்.

மேலும் தான் சிறை செல்வதற்கு தயார் என்று கூறிய புறா கார்த்திக், ஆனால் தனக்கு ஒரு கடமை பாக்கி இருப்பதாகவும், அது என்னவென்றால் கடைசியாக ஒருமுறை தனது நாய்களையும் புறாக்களையும் பார்த்துவிட்டு அவற்றுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு வர அனுமதி கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்த வேண்டுகோள் போலீஸாரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Tags : #PURAKARTHIK