'புத்தாண்டில் பீச் போக அனுமதி இல்ல...' அடுத்தது ஸ்டார் ஹோட்டல்களிலும் கொண்டாட்ட தடையா...? - வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மெரினா கடற்கரையில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கும் அதிரடியான தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி இசிஆர் சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வாடிக்கை. இளைஞர்கள் கடற்கரையில் கூடி புத்தாண்டை வரவேற்பர். சில மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாட்டுத் தளங்களிலும் அமைதியாக வரவேற்பர்.
ஆனால் புள்ளிங்கோ இளசுகள் செய்யும் அட்டகாசம் அச்சுறுத்தலாக இருக்கும். சாலையில் வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வது, கத்தி கூச்சல் போட்டுக்கொண்டே இதய நோயாளிகளுக்கு தொந்தரவு செய்வது, அரசு அனுமதித்த நேரம் அல்லாத நேரங்களிலும் பட்டாசு வெடிப்பது என ஒரே கூத்தாக இருக்கும்.
இது ஒருபக்கம் என்றால் பண்ணை வீடுகளிலும், பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் ஆடல், பாடல், இசை, குடி என்று புத்தாண்டை கொண்டாடுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவலால் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை.
இந்த வருடமும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் அதுபோன்ற கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்றே காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, 'கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அங்கு மக்கள் அலைகடல் என கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்படுவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து ஸ்டார் ஓட்டல் உரிமையாளர்களிடம் விரைவில் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளது.
தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால் அதை கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளோம். எனவே ஓமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் ஓட்டல் உரிமையாளர்களும், பண்ணை வீடு அதிபர்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.' என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
