பழமையான 'சிவாலயம்' இருக்க வாய்ப்பு ... கீழடிப் போல் 'கழுகுமடை' அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 09, 2020 06:39 PM
சிவகங்கை மாவட்டம் கோவனூரில் கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்திலும் அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் கோவானூரில் அருகே 300 ஆண்டு பழைமையான கலுங்குமடை கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கோவனூர் கண்மாய்கரையில் 5 கண்களை உடைய கலுங்குமடையின் கட்டுமானத்தில் இந்த கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றுள் சில கல்வெட்டுகள் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. கழுகு மடைக்கு அருகே முதுமக்கள் தாழி புதைந்து இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்ததாவது, சிவகங்கை அருகே கோவனூரில் 300 ஆண்டுகள் பழமையான கலுங்குமடை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்மாய் நிறைந்து வழியக்கூடிய இடமே கலுங்குமடை என்று அழைக்கப்படுகிறது.
சேதுபதி மன்னர்கள் காலத்தில் வீரமுத்து முத்தப்பன் சேர்வைக்காரன் என்பவரது தலைமையில் இந்த மடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 5 கல்வெட்டுகள் காணப்படுகிறது. இதில் ஒரு கல்வெட்டு மட்டும் நேர்கொண்டவையாகவும், மற்றவை அனைத்தும் தலைகீழாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் சில கல்வெட்டுகள் ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றது. அவை தலைகீழாக உள்ள கல்வெட்டுடன் இணைத்து படிக்கும் பொழுது செய்திகள் பல கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோவனூர் ஊருணி படித்துறையில் பாண்டியர்கால கல்வெட்டு, குமிழி மடை தூண், சேதுபதிகால கல்வெட்டு ஆகியவை கிடைத்துள்ளன. எனவே இங்கு பாண்டியர் காலத்து மிக பழமையான சிவாலயம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
