'குடும்ப கட்டுப்பாடு பண்ணியாச்சு, அப்புறம் எப்படி...' 'வயித்துல இருக்குற குழந்தைய கலைக்க பெர்மிஷன் கொடுங்க...' உயர்நீதிமன்றத்தில் மனு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 16, 2020 04:35 PM

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும் கர்ப்பமானதால் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

a women became pregnant after a family-controlled operation

மதுரை அவனியாபுரம் பெரியார் நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராக்கு (35), உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

என் கணவர் விஸ்வநாதன். எங்களுக்கு 2007-ல் திருமணம் நடைபெற்றது. 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 17.4.2014-ல் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

இந்நிலையில் சமீபத்தில் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றபோது சாதாரண வலி தான் என்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதித்தபோது நான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும்  கர்ப்பமானது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளை கவனிக்கவும், படிக்க வைக்கவும் நானும், கணவரும் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறோம். இன்னொரு குழந்தை பெற்றெடுக்கும் மனநிலை, உடல் நிலையில் நான் இல்லை. எனவே, என் வயிற்றில் வளரும் 13 வார கருவைக் கலைக்க அனுமதிக்கவும், எனக்கு இழப்பீடு வழங்கவும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததில் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் பத்மாவதிதேவி, வழக்கறிஞர் கு.சாமிதுரை ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் மனநல மருத்துவர் மூலமாக ஆலோசனை வழங்கினார். இதைத் தொடர்ந்து ஐந்தாவது குழந்தையை பெற்றெடுக்க ராக்கு சம்மதித்தார். அதே நேரம், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பமானதால் தனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராக்கு கேட்டுக்கொண்டார்.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் அனைவரும் தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர், எனவே  மனுதாரரின் குழந்தைகள் படிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், மனுதாரர் தற்போது மதுரையில் வசிக்கிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் மனுதாரர் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனுதாரருக்கு நிதி உதவி மற்றும் அவரது கணவருக்கு தற்காலிக வேலை வழங்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மார்ச் 30-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Tags : #FAMILYPLANNING