'நான்கு வயது மகளுடன் மொட்டை மாடியிலிருந்து குதித்த தந்தை...' 'திடீரென அன்பு மகளை மாடிக்கு அழைத்து சென்று...' 'ஏன் இப்படி நடந்துக்கொண்டார் தெரியுமா...? அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 24, 2020 06:23 PM

மதுரவாயலில் இளைஞர் ஒருவர் தனது நான்கு வயதுப் பெண் குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்ததில் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

A father suicide by jumping on the terrace with his daughter

மதுரவாயல், பொன்னியம்மன் மேடு, பொன்னுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). இவரது மனைவி டோனலெட்டி சுனிதா(26). இவர்களுக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 4 வயதில் ஹரிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளனர். அவர் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு பூண்டு குடோனில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பதிக்கு மன அழுத்த நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக கடந்த இரு வருடங்களாக மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பதி வீட்டில் இருந்துள்ளார். மதியம் சுமார் 2 மணியளவில் திருப்பதிக்கு திடீரென அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மனைவி வீட்டு பணிகளில் இருந்துள்ளார். திடீரென திருப்பதி தனது 4 வயது மகள் ஹரிகாவுடன் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். மொட்டை மாடிக்குச் சென்றவர் திடீரென மகளுடன் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ஹரிகா உயிரிழந்தார். திருப்பதி ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்தார்.

தந்தையும் மகளும் மாடியிலிருந்து குதித்ததைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவரும் உயிரிழந்தார். கணவரையும் மகளையும் பறிகொடுத்த மனைவி கதறினார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் இருவர் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரது மரணத்துக்கும் திருப்பதியின் மன அழுத்த நோயே காரணம் என்று கூறப்படுகிறது. மகன் தாயுடன் இருந்ததால் தப்பித்துள்ளார். இல்லாவிட்டால் மகனையும் திருப்பதி உடன் அழைத்துச் சென்றிருப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #FATHERDAUGHTER