'அடக்கம் பண்ண எங்க நிலத்தை எடுத்துக்கோங்க...' 'அந்த சம்பவம் வேதனையா இருந்துச்சு...' பிரதமருக்கு உருக்கமான கடிதம் எழுதிய மாணவி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அவர்களது விவசாய நிலத்தை கொரோனா பாதித்தவர்கள் புதைக்க எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய செய்தி அனைவரின் மனதையும் நெகிழ செய்துள்ளது.
மதுரையின் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், தென்னரசி என்னும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்
அக்கடிதத்தில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டுமக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கும், செலிவியர்களுக்கும், நம்மை காக்கும் காவல் அதிகாரிகளுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்படுகிறது. நமக்கு உதவும் அவர்கள் நோய் தொற்றால் இறக்கும் போது ஒரு சிலர் அவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தன்னலமின்றி நமக்காக தொண்டாற்றும் பலர் இதனால் வேதனை அடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தந்தை சிறு குறு விவசாயி எனவும், தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த முடிவானது தனது தந்தை, தாயாரின் ஒப்புதலின் பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் மதுரையை சேர்ந்த தென்னரசி.