'ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிற எல்லா வீடுகளிலும் போலீஸ்..' 'இங்க எல்லாம் சீக்கிரமா பரவிடும், அதனாலதான்...' 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 26, 2020 11:44 AM

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் 283 வீடுகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

24-hour surveillance to prevent the escape isolated individuals

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோர் தனியாக கண்டறியப்பட்டு மருத்துவமனைகளிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்திஉள்ளது. மேலும், இதுபோன்றவர்களின் வீடுகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 483 பேரின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இவர்களில் திருச்சி மாநகர பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 283 வீடுகளில் வசிக்கும் சிலர், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அனைத்து வீடுகளிலும் நேற்று முதல் போலீஸ் நிறுத்தப்பட்டு, யாரும் வெளியேறாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் கூறுகையில், “திருச்சி மாநகரம் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதியாகும். இங்கு யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பிறருக்கு அதிவேகமாக பரவ வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த வீடுகளைக் கண்காணிப்பார்கள்.

இதுகுறித்த விவரங்களைச் சேகரிக்கவும், களத்தில் உள்ள காவலர்களுடன் தகவல் பரிமாற்றத்துக்காகவும், கொரோனா வைரஸ்தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும் திருச்சி மாநகர காவல்துறையில் தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : #ISOLATED