‘அன்னைக்கு’... ‘காரில் அவங்க போட்டோ இல்லனா’... ‘தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட’... ‘முன்னாள் இந்திய வீரர் அதிர்ச்சி தகவல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமன அழுத்தத்தால் துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் ஏன் அவ்வாறு செய்ய துணிந்தார் என தற்போது தெரியவந்துள்ளது.

ஸ்விங் பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிரவீன் குமார், கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதற்கடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கியப் பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்துவீச்சின் மூலம், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களையே, பிரவீன் குமார் மண்ணைக் கவ்வச்செய்துள்ளார்.
திறமையான வீரராக இருந்த இவர், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித் தவித்தார். உதாரணமாக, வலைப்பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவை கிண்டல் செய்த ரசிகர் ஒருவரை, பிரவீன் குமார் ஸ்டம்பை பிடுங்கித் தாக்க முயன்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு அணியில் இடம் பிடிக்காத இவர், கடந்த 2018-ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும், தனிமையும் அவருக்கு கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இரவு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து காரில் ஹரித்துவார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியை எடுத்துள்ளார். ஆனால் காரில் இருந்த தனது குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்த அவருக்கு மனம் மாறியுள்ளது.
‘என் அப்பாவி குழந்தைகளுக்கு இதை என்னால் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அவர்களை இந்த நரகத்தில் வைத்துவிட்டு நான் செல்ல முடியாது. அங்கிருந்து நான் திரும்பி வந்தேன்’ என்று தெரிவித்தார். தற்போது மனஅழுத்தத்துக்கு சிசிச்சை எடுத்து, அதில் இருந்து மீண்டுள்ள பிரவீன் குமார், ‘இந்தியாவில் மனச்சோர்வை யார் புரிந்து கொள்கிறார்கள்? இதைப் பற்றி யாருக்கும் தெரியாது?... கிரிக்கெட் தனது விருப்பம். அதை விட்டு வெளியேறுவது கடினம்’ என்றும் கூறியுள்ளார்.
மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்திருந்த நிலையில், இப்போது இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் அதுகுறித்து பேசியிருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
