‘ரோகித்-க்கு ‘அவர்’ மேல அவ்வளவு நம்பிக்கையா? அப்போ அந்த ஆஸ்திரேலியா ப்ளைட்-க்கு டிக்கெட் கன்ஃபார்ம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னணி இந்திய வீரர் ஒருவர் மேல் ரோகித் சர்மா அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருப்பதால் நிச்சயம் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இவர் பங்கேற்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பரும் பேட்ஸ்மேனும் ஆன தினேஷ் கார்த்திக்.
வருகிற 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அந்த போட்டித் தொடரில் நிச்சயம் யுவேந்திர சாஹல் இடம்பெறுவார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் சாஹல், இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதன் பின்னர் நேற்று நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சாஹல் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆனாலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-வது போட்டியிலேயே சாஹல் ‘ஆடும் 11’ வீரர்கள் பட்டியலுக்குள் வந்தார். இந்நிலையில் அடுத்த 2022 டி20 உலகக்கோப்பையில் சாஹல் இடம்பெறுவாரா என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், “மீண்டும் சாஹலை மைதானத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 2021 ஐபிஎல் போட்டிகளின் பிற்பாதியில் சாஹல் தனது தனித்திறமையை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தார்.
சாஹலை எனக்கு சிறந்த வீரர் என்பதற்காக பிடிக்கும். மேலும், அவர் ஒரு சிறந்த செஸ் வீரர் என்பதாலும் பிடிக்கும். சாதாரணமானவர்களை விட செஸ் விளையாடுபவர்கள் இன்னும் ஆற்றல் உடன் இருப்பார்கள். ஆட்டத்தில் அவருக்கு நல்ல திறன் இருக்கிறது, நிறைய மாறுபாடுகளைக் காண்பிக்கிறார், தைரியமாகவும் செயல்படுகிறார். கடந்த 2013-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஐபிஎல்-ல் 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டவர் சாஹல். இன்று அவரது மதிப்பே வேற உச்சத்தில் இருக்கிறது. நிச்சயமாக அடுத்த ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணியிலேயே சாஹல் நீடிப்பார் என நினைக்கிறேன்.
சர்வதேச அளவிலும் அவர் மிகச்சிறந்த பவுலர் என்பதால் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் சாஹல் தேர்ந்தெடுக்கப்படுவார். அதனால், அன்று கிளம்பும் ஆஸ்திரேலியா விமானத்தில் நிச்சயம் சாஹலுக்கு இடம் உண்டு. கூடுதலாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சாஹல் மீது அதிக நம்பிக்கை உண்டு. மைதானத்துக்கு வெளியில் மட்டுமல்ல மைதானத்திலும் அவர்களது நட்பு பெரியது” எனப் பேசியுள்ளார்.