‘19-வது ஓவர்ல அவர்கிட்ட நான் சொன்னது இதுதான்’.. பக்கா ‘ப்ளான்’ போட்டு ஜெயிச்ச ராஜஸ்தான்.. ரியான் பராக் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) தொடரில் 32-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (RR) மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 185 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இப்போட்டியில் நடந்த சுவாரஸ்யமான தகவலை ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் (Riyan Parag) பகிர்ந்துள்ளார். அதில், ‘இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆட்டம் எங்கள் கையைவிட்டு நழுவி சென்றது. அப்போது 19-வது ஓவரை முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) வீசினார். உடனே அவரிடம் சென்று, இந்த ஓவரில் போட்டியை முடித்துவிட கூடாது, கடைசி ஓவரை கார்த்திக் தியாகியை வைத்து நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினேன்’ என ரியான் பராக் கூறியுள்ளார்.
இப்போட்டியின் 18 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை பஞ்சாப் அணி எடுத்திருந்தது. அதனால் வெற்றிக்கு இன்னும் 8 ரன்களே தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான், 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதனால் கடைசி ஓவரில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு பஞ்சாப் அணி சென்றது.
அந்த சமயம் கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி (Kartik Tyagi), 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.