'3' வருசத்துக்கு முன்னாடி நடந்த 'பஞ்சாயத்து'.. மீண்டும் களத்தில் குதிக்கும் 'ரமேஷ் பவார்'.. 'இந்திய' மகளிர் 'கிரிக்கெட்'டில் நடக்கப் போவது என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த WV ராமனின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு ரமேஷ் பவார் (Ramesh Powar) உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இறுதியில், மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார், இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பாக, ரமேஷ் பவார் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், அவருக்கும், மகளிர் அணியின் சீனியர் வீரரான மிதாலி ராஜுக்கும் (Mithali Raj) பெரிய பஞ்சாயத்தே நிகழ்ந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, அரை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியிருந்தது.
மிகவும் முக்கியமான இந்த போட்டியில், மிதாலி ராஜ் சேர்க்கப்படாமல் போனது தான், அந்த சமயத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இருவரும் மாறி மாறி, புகார்களை அடுக்கித் தள்ளினர்.
தன்னை அவமானப்படுத்தி, தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்கப் பார்க்கிறார் என மிதாலி ராஜ், ரமேஷ் மீது குற்றஞ்சாட்ட, மறுபக்கம், வேண்டுமென்றே அணியில் குழப்பத்தை உண்டு பண்ணி, மிதாலி ராஜ் தான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் என ரமேஷ் பவார் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் மதன்லால் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'கமிட்டியில் உள்ள அனைவரும், ரமேஷ் பவார் தான் பயிற்சியாளர் பொறுப்பில் தகுந்தவராக இருப்பார் என ஒரு மனதாக தேர்வு செய்துள்ளோம். அவர் மிதாலி ராஜுடன் இணைந்து, பணிபுரியவுள்ளதில் எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது. ஒரு கேப்டனாக அணியை முன்னெடுத்து செல்வதில் மட்டும், மிதாலி ராஜ் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார்.
மேலும், பிசிசிஐயின் முன்னாள் உறுப்பினரான டயானா எடுல்ஜீ இது பற்றி பேசுகையில், 'இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர்கள் இருவரும் விரும்பினால், ஒன்றிணைந்து வெற்றி பெற வழி செய்ய வேண்டும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முன்னணியில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். ரமேஷின் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.