இதுக்கு மேலயும் தப்பு பண்ணாதீங்க டிராவிட்.. சீக்கிரம் முடிவு எடுங்க.. கறாராக சொன்ன தினேஷ் கார்த்திக்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடினமான முடிவு ஒன்றை எடுத்தே ஆக வேண்டுமென தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் தொடரில் மோத வேண்டி, தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது, இரு அணிகளும் மோதி வருகிறது.
தடுமாறிய இந்திய அணி
காயம் காரணமாக, இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியில் தலைமை தாங்கவில்லை. அவருக்கு பதிலாக, கே எல் ராகுல், இந்திய அணியை வழி நடத்தினார். மேலும், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய இந்திய அணியில், கேப்டன் ராகுல் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினார்.
மறுபுறம், விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. ராகுலும் 50 ரன்கள் அடித்து அவுட்டான நிலையில், இறுதி கட்டத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனியாளாக போராடி, ஓரளவுக்கு இந்திய அணியை மீட்டெடுத்தார். தொடர்ந்து, 202 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டானது.
சீனியர் வீரர்கள் மீது விமர்சனம்
பின்னர், முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணியில் சில பேட்ஸ்மேன்களின் செயல்பாடு, கடுமையான விமர்சனத்தினை சந்தித்து வருகிறது.இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர், கடந்த பல தொடர்களில், எந்தவித தாக்கத்தையும் பேட்டிங்கில் ஏற்படுத்தவில்லை.
நெருக்கடியில் புஜாரா, ரஹானே
இந்திய அணியின் பல டெஸ்ட் வெற்றிகளுக்கு உறுதுணையாக நின்ற இவர்கள், சமீப காலமாக தடுமாறி வருகிறார்கள். இவர்களின் ஃபார்ம் அவுட் காரணமாக, இந்திய அணி, மிடில் விக்கெட்டுகளில் ரன் அடிக்க கடுமையாக திணறி வருகிறது. அதே போல, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், புஜாரா 3 ரன்களிலும், ரஹானே முதல் பந்திலும் அவுட்டாகி, மீண்டும் ஏமாற்றத்தையே அளித்தார்கள். இதனால், இனி வரும் டெஸ்ட் போட்டிகளில், இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் சில கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது எல்லாம் வேலைக்கு ஆகாது
இந்நிலையில், இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக், இது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'உலகின் சிறந்த டெஸ்ட் அணியில், மூன்றாவது வீரராக பேட்டிங் செய்யும் புஜாரா, தொடர்ந்து தடுமாறி வருகிறார். மூன்று ஆண்டுகளாக இந்த தடுமாற்றம் இருந்தே வருகிறது. ரஹானேவும் அதே போல தான். சிறப்பாக ஆடாத போதும், இவர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வருவதற்கான காரணம், சீனியர் வீரகர்கள் என்பதாலும், அவர்களிடம் இருக்கும் திறமையாலும் தான்.
வாழ்க்கை ஒரு வட்டம்
ஆனால், இப்போது அவை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. அடுத்த போட்டியில், ஒரு வேளை கோலி திரும்ப வந்தால், இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டும். ராகுல் டிராவிட் தனது கரியரின் இறுதிக் கட்டத்தில் இருந்த போது, அவரது இடத்தை கைப்பற்றியவர் புஜாரா. இதன் பிறகு தான், டிராவிட் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டார். வாழ்க்கை ஒரு வட்டம். அன்று, டிராவிட் கரியரை புஜாரா முடித்து வைத்தது போல, இன்று டிராவிட் அதனை செய்ய வேண்டும்.
கடினமான முடிவு
புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை அணியில் இருந்து நீக்கும் கடினமான முடிவை டிராவிட் எடுத்தாக வேண்டும். அப்படிப்பட்ட கட்டாயத்தில் நீங்கள் உள்ளீர்கள். அவர்களுக்கு நீண்ட காலமாக அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். புஜாரா, ரஹானே இடத்தில் விளையாட வேண்டி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி உள்ளிட்ட வீரர்கள் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.