போன வருசம் இந்திய அணியில் ‘நெட் பவுலர்’.. இப்போ ராஜஸ்தான் அணிக்கு ‘ஹீரோ’.. ஒரு ஓவரில் போட்டியை மாற்றிய இளம் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (RR) மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49 ரன்களும், மஹிபால் லோமோர் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், இஷான் போரல் மற்றும் ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இதில் மூன்று முறை கே.எல்.ராகுலின் கேட்ச்சை ராஜஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். அதனால் இந்த கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது சேத்தன் சக்காரியா ஓவரில் கே.எல்.ராகுல் அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து ராகுல் திவாட்டியாவின் ஓவரில் மயங்க் அகர்வாலும் (67 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு பஞ்சாப் அணி வந்தது.
இந்த சமயத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி (Kartik Tyagi) கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் செல்லவில்லை. அடுத்த பந்தில் ஐடன் மார்க்ரம் 1 ரன் அடித்தார். அப்போது மூன்றாவது பந்தை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனால் 3 பந்துகளில் 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி வந்தது. இந்த சமயம் களமிறங்கிய தீபக் ஹூடா, நான்காம் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் இருக்க, அடுத்த பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் பஞ்சாப் அணி ரன் ஏதும் எடுக்காததால், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில், கார்த்திக் தியாகி தனது அபார பந்துவீச்சின் மூலம் அதை கட்டுப்படுத்தினார். அதனால் பும்ரா, சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நடராஜன் உட்பட நான்கு வீரர்களில் கார்த்திக் தியாகியும் நெட் பவுலராக சென்றது குறிப்பிடத்தக்கது.