'எதிர்பார்த்தத விட பயங்கரமா இருக்காரு'!.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்!.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்!.. யார்க்கர் கிங் நட்டுவை வைத்து 'மெகா பிளான்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடராஜனை வைத்து இந்திய அணியில் பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் தமிழக வீரர் நடராஜன். அவரை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுடன் சேர்ந்து பந்து வீச வைத்து உலகின் மிரட்டல் ஜோடியாக மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஐபிஎல் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும், 2020 ஐபிஎல் தொடரில் தான் தன் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இந்த சீசனில் அவர் செயல்பட்டார்.
நடராஜனின் சிறப்பே யார்க்கர் பந்து வீச்சு தான். நவீன கால டி20 பாணி கிரிக்கெட்டில் யார்க்கர் பெரும் பங்கு வகிக்கிறது. யார்க்கர் பந்துகளில் அத்தனை எளிதில் அடித்து ஆடி விட முடியாது. காரணம், தப்பினால் மரணம் என்கிற ரீதியில் தான் பேட்ஸ்மேன்கள் அதை அணுக முடியும்.
அந்த வகையில், 2020 ஐபிஎல் தொடரில் மற்ற எந்த சர்வதேச, உள்ளூர் பந்துவீச்சாளரையும் விட அதிக யார்க்கர் பந்துகளை வீசி மிரட்டிய நடராஜன் முதலில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. கூடுதல் பந்துவீச்சாளராகவே தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், வருண் சக்கரவர்த்தி காயத்தால் நீக்கப்பட்டதை அடுத்து நடராஜன் டி20 அணியில் வாய்ப்பு பெற்றார். அவர் வலைப் பயிற்சியில் விராட் கோலி, ரவி சாஸ்திரி முன்னிலையில் பந்து வீசி அவர்களை ஈர்த்தார்.
அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் கிடைக்கும் என கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் நடராஜனை பயன்படுத்த திட்டமிடவில்லை. அதையும் தாண்டி டி20 உலகக்கோப்பை வரை அவர் இந்திய அணியுடன் பயணிக்க வாய்ப்பு உள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
அது எப்படி சாத்தியம்? அதற்கு காரணம், அவரது யார்க்கர்கள் தான் என்கிறார்கள்.
இந்திய அணியில் பும்ரா, கிரிக்கெட் ஜாம்பவான்களை அச்சுறுத்தும் வீரராக விளங்குகிறார். முகமது ஷமி அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஆனாலும், பும்ராவுக்கு சரியான ஜோடியாக ஒரு பந்துவீச்சாளரை தேடி வருகிறது இந்திய அணி. இதற்கு ஐபிஎல் உதாரணம் ஒன்றும் உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்த வேகப் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம். அந்த அணியில் ட்ரென்ட் போல்ட் - பும்ரா ஜோடியாக பந்து வீசி எதிரணிகளை மிரள வைத்தனர். போல்ட் ஸ்விங் பந்துவீச்சில் கிங் என்றால், பும்ரா யார்க்கர் வீசி மிரள வைத்தார்.
அதே போல, யார்க்கர் மன்னன் நடராஜன், ஏற்கனவே உலகின் சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவுடன் இணைந்தால் எதிரணிகள் நிச்சயம் கடும் அழுத்தத்துக்கு ஆளாகும். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்த ஜோடியை கேப்டன் விராட் கோலி பயன்படுத்திப் பார்க்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
இரண்டு சிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர்கள் ஒன்று சேர்ந்தால் டி20 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ரன் குவிப்பது கடினமாக மாறும். அப்போது அதிக விக்கெட்களும் விழும். இந்த வாய்ப்பை கேப்டன் கோலி தவறவிட மாட்டார் என்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகரும், முன்னாள் இந்திய வீரரும் ஆன விவிஎஸ் லக்ஷ்மன் நடராஜனை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என இப்போதே குரல் கொடுத்துள்ளார். அவர் நடராஜனிடம் யார்க்கர் தவிர இன்னும் பல வித்தைகள் இருப்பதாக கூறி உள்ளார்.

மற்ற செய்திகள்
