ICC T20I ரேங்கிங்: 108 இடங்கள் முன்னேறி பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC, சர்வதேச T20I ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறியுள்ளார்.
சர்வதேச T20I போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ICC. இதில், தென்னாப்பிரிக்க தொடரில் 206 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல, 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்து அதிரடியில் கலக்கிய தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறி தற்போது 87 வது இடத்தில் இருக்கிறார்.
கைகொடுத்த ஐபிஎல்
கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெத் ஓவர்களில் களமிறங்கி எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அனல் பறக்கும் பேட்டிங் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட கார்த்திக் இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டும் அல்லாமல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், ஐசிசி சர்வதேச T20I ரேங்கிங் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறியிருப்பது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய வீரர்கள்
பந்துவீச்சாளர்களுக்கான ICC சர்வதேச T20I தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், 3 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று, ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 3 ஆம் இடத்திலும், ரோகித் ஷர்மா 4வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5வது இடத்தில் நீடிக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்து, பேட்டிங்கில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் ICC சர்வதேச T20I தரவரிசை பட்டியலில் 108 இடங்கள் முன்னேறியது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | அப்படிப்போடு... 11 ஆம் வகுப்பில் பாடப்பிரிவு ஒதுக்கீடு.. பள்ளிக்கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு..!