'அதிரடி' வீரரை குறி வைக்கும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'??... சூசகமாக தெரிவித்த 'சிஎஸ்கே' கோச்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது.
செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல், 8 அணிகள் ஐபிஎல் தொடரில் உள்ள நிலையில், புதிதாக இரு அணிகளும் இணையக் கூடும் என்றும், அதற்காக மெகா ஏலம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் முதல் முறையாக வெளியேறியது. அணியிலுள்ள சீனியர் வீரர்கள் பெரியளவில் ஆடாமல் போனது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியிலுள்ள சில வீரர்களை மாற்றி, முற்றிலும் புதிய பலம் வாய்ந்த அணியை உருவாக்கப் போவதாக சென்னை கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், அடுத்த சீசனில் சென்னை அணியில் ஒரு அதிரடி வீரரை எடுக்கவுள்ளது குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று டி 20 போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி வீரர் டிம் செய்பெர்ட், அதிரடியாக ஆடி அதிக ரன்கள் குவித்திருந்தார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த போதும் ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை. கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்கல்லம் இருந்தார். அதே போல, கரீபியன் பிரிமியர் லீக் டி 20 தொடரில் டிம் செய்பெர்ட், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த போதும் அந்த அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் தான் இருந்தார்.
இதுகுறித்து போட்டியின் போது வர்ணனையில் பேசிய ஸ்டீபன் பிளெம்மிங், 'இங்கு மஞ்சள் நிற அணி (சிஎஸ்கே) ஒன்று உள்ளது. அவர்கள் உங்களின் ஆட்டத்தை கவனிக்கக் கூடும். மெக்கல்லம் அணி மட்டுமல்ல, அதைத் தாண்டி வேறு அணிகளும் இங்கு உள்ளது' என டிம் செய்பெர்ட்டைக் குறிப்பிட்டு கருத்து ஒன்றை பிளெம்மிங் கூறியுள்ளார்.
இதனால் சென்னை அணி, அடுத்த சீசனில் டிம் செய்பெர்ட்டை தங்கள் அணிக்கு தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுவது போல உள்ளதால் என்ன நடைபெறும் என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.