‘அடேங்கப்பா.. 2011-ல பாத்தது’.. 11 வருசத்துக்கு அப்புறம் IPL -ல் ரீ என்ட்ரி கொடுக்கும் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்து விளையாட உள்ள ஆஸ்திரேலிய வீரர் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வெளிநாட்டு வீரர்கள் பலர் அதிக விலைக்கு ஏலம் போயினர். அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட், குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ரூ. 2.40 கோடி ரூபாய்க்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது.
கடைசியாக 2011-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் மேத்யூ வேட் விளையாடினார். ஆனால் மொத்தமாக 22 ரன்கள் மட்டுமே அவர் எடுத்ததால், அதற்கு அடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களிலும் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மேத்யூ வேட் இடம் பெற்றிருந்தார். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக மேத்யூ வேட் இருந்தார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி வீசிய 19-வது ஓவரில் 3 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்து உள்ளது. அதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் மேத்யூ வேட் விளையாட உள்ளார்.

மற்ற செய்திகள்
