'ஆடியன்ஸ்' இருக்காங்க, ஆனா இல்ல... கொரோனா 'சீசன்'ல அதான்... 'பக்கா' ப்ளானுடன் நடைபெறும் 'கிரிக்கெட்' தொடர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் உட்பட பல கிரிக்கெட் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டி தொடர் வரும் புதன்கிழமை எட்டாம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் மூன்று போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இருக்கும் உணர்வை அணி வீரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக புதிய முடிவு ஒன்றை நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
அதாவது, போட்டிகளின் நடுவே ரசிகர்களின் செயற்கையான ஒலிகளை ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விளையாடும் வீரர்களுக்கு போட்டியின் போது ரசிகர்கள் சுற்றி இருப்பது போன்ற உணர்வை அளிப்பதுடன் அவர்களுக்கு ஒரு விதமான உத்வேகம் மற்றும் உணர்வினை அளிக்கும். அதே போல போட்டியை வெளியில் இருந்து காணும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் பார்ப்பதற்கான உணர்வை அளிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
போட்டியின் போது முக்கிய அம்சங்களாக திகழும் விக்கெட்டுகள், பவுண்டரிகள் போன்றவை நடக்கும் பொழுது அதற்கேற்ற வகையில் ரசிகர்களின் ஆரவார ஒலியை எழுப்பவும் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, கால்பந்து போட்டி ஒன்றிலும் இதே போன்று செயற்கையான ரசிகர்களின் ஒலியை உருவாக்கி போட்டியை நடத்தியிருந்தனர். நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவது என்பது, ஒரு விதமான வெறுமையை தோற்றுவிக்கும் என்றும், நிர்வாகத்தின் இந்த முடிவு நிச்சயம் வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெறும் உணர்வை அளிக்கும் என்றும் இரு அணி வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.