‘பயமா, எனக்கா’...!!! ‘வயசெல்லாம் ஜஸ்ட் நம்பர் தான்’...!!! ‘82 வயது மூதாட்டியின் சாகசம்’...!!! ‘வியந்து நின்ற மக்கள்’!!!
முகப்பு > செய்திகள் > கதைகள்சிக்கிம் மாநிலத்தில் 82 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் வானில் பறந்து அசத்தியிருக்கிறார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
தான் வானில் சுதந்திரமாகப் பறந்தது குறித்து மூதாட்டி லேப்ச்சா கூறும்போது, ‘இது ஒரு சுகமான அனுபவம். நான் பாராகிளைடரில் பறப்பதற்கு பயப்படவில்லை. மாறாக இதை ரசித்து அனுபவித்தேன். எனக்கு முன்னால் பாராகிளைடரில் பறந்த எனது 17 வயது பேத்தி, கொஞ்சம் பயந்தாள். ஆனால் எனக்கு அச்சம் ஏதுமில்லை. வானில் பறப்பது எப்படி இருக்கும் என்று நான் உணர விரும்பினேன். இது எனது முதல் சாகச விளையாட்டு கிடையாது. கடைசி சாகச விளையாட்டாகவும் இருக்காது’ என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு அந்தமான் கடலில் ‘ஸ்கூபா டைவிங்’கில் ஈடுபட்ட சாகச மூதாட்டி துக்மித் லேப்ச்சா, இனி அடுத்து சைக்கிளிங்கில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது வரம்பின்றி அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
