'எத்தனை நாள் இருந்த கோபமோ தெரியல'... 'ஜாலியா வெளிய கூட்டிட்டு போய் 'காதலன்' செஞ்ச செயல்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 24, 2019 09:54 AM
காதலிக்கும் பெண்ணை தனது உறவினர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என கூறி, காதலியை பள்ளத்தில் தள்ளி விட்டு சென்ற காதலனின் செயல் பலரையும் அதிர செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஆத்வனி பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றிலிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அந்த பள்ளத்தின் பக்கத்தில் வந்து பார்த்துள்ளார்கள். அப்போது பெண் ஒருவர் உதவி கேட்டுக்கொண்டு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போன அவர்கள், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணை வெளியே கொண்டு வந்தார்கள்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மேற்கு வங்காளத்தினை சேர்ந்த அந்த பெண் டெல்லியில் கடந்த 2 வருடங்களாக தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே தன்னுடைய உறவினர்களிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் என கூறி அந்த பெண்ணை டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு காரில் காதலன் அழைத்து வந்துள்ளார். காதலனின் உறவினர்களை பார்க்க செல்கிறோம் என்ற நம்பிக்கையில் அந்த பெண்ணும் காதலனுடன் வந்துள்ளார்.
இதனிடையே கிராமத்திற்கு வந்த இருவரும் காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார்கள். அப்போது சிறிது தூரம் சென்றவுடன் தனது காதலியை அருகில் இருந்த பள்ளத்தில் தள்ளி விட்டு விட்டு காதலன் தப்பித்து சென்றுள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இந்நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி சென்ற காதலனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். காதலன் சிக்கினால் மட்டுமே காதலியை தள்ளி விட்டதற்காக முழுமையான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
