பட்ஜெட் 2021: 'எல்.ஐ.சி பங்குகள் விவகாரம்'... பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்.ஐ.சி பங்குகள் குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது உரையாற்றிய அவர், பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க புதிய குழு அமைக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் ஒழுங்கு செய்யப்படும்.
காப்பீடு திட்டங்களில் 74 சதவீத அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்படும். பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படும். பொதுத்துறை பங்கு விலக்கல் மூலம் 1.70 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி பங்குகளை விற்க துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்த அவர், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது, அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு முடக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் சிக்கலின்றி முதலீட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி டெபாசிட் இழப்பீடு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் தாங்கள் விரும்பும் மின் விநியோக நிறுவனத்தில் இருந்து, விருப்பமுள்ள மின் விநியோகத்தை பெரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த விநியோக நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கப்பல் துறையில் உலக நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் பங்கெடுக்கும் வகையில் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கோடி ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். எல்ஐசி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2 பொதுத்துறை வங்கி 2 காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.