'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட இயக்குனருக்கு மிக உயரிய பாதுகாப்பு.. வெளிவந்த புதிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியா'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' திரைப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1990-களில் காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் அங்கிருந்து அவர்கள் வெளியேற பாடுபட்டதையும் கதைக் களமாக கொண்டுள்ளது இந்தப் படம். விவேக் அக்னிகோத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
பாராட்டிய பிரதமர்
மார்ச் 11 ஆம் தேதி வெளியான இந்த படத்தினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்த்துவிட்டு இப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதேபோல, திரிபுரா மாநில முதல்வர் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் இந்த படத்தினை காணச் செல்லும் காவல்துறை அதிகாரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார். கோவா மாநிலத்தில் அதிக அளவில் இந்தப் படத்தினை திரையிட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தப் படத்தினை பார்க்கச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்து இருக்கிறார் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
ஒய் பிரிவு பாதுகாப்பு
இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகை பாதுகாப்பை பொறுத்தவரையில் 8 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் இருக்கக்கூடும்.
இதே போல, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.