PADMA AWARDS : RRR இசையமைப்பாளர் கீரவாணி, KGF நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கப்படும் தகவலை மத்திய அரசு முன்னரே வெளியிட்டிருந்தது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
பத்ம விபூஷண் விருது
உயரிய பத்ம விபூஷண் விருது மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், மகாராஷ்டிரா தபேலா கலைஞர் ஜாஹிர் ஹுசைன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, குஜராத் கட்டிடவியல் நிபுணர் பாலகிருஷ்ண தோஷி , மேற்கு வங்க குழந்தைகள் நல மருத்துவர் திலீப் மஹலானாபிஸ், அமெரிக்க வாழ் இந்திய கணிதவியலாளர் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகிய 6 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
இவர்களுள் முலாயம் சிங் யாதவ், திலீப் மஹலானாபிஸ், பாலகிருஷ்ண தோஷி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் இந்த பத்ம விபூஷண் விருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷண் விருது
உயரிய பத்ம பூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம், கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா, டெல்லி மொழியியல் பேராசிரியரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் இணை துணைவேந்தருமான கபில் கபூர் , மகாராஷ்டிர ஐஐஎஸ்சி இயற்பியல் துறைப் பேராசிரியர் தீபக் தர், மகாராஷ்டிர தொழிலதிபர் கே.எம்.பிர்லா, ஆன்மிகத் தலைவர் கமலேஷ் டி.படேல் , தெலங்கானா ஆன்மிகத் தலைவர் சுவாமி சின்ன ஜீயர், மகாராஷ்டிர திரைப்பட பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர், இன்போசிஸ் நிறுவனஇணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும் இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவருமான சுதா மூர்த்தி (கர்நாடகா) ஆகிய 9 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ விருதுகள்
தவிர பரதக் கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை, புதுச்சேரி மருத்துவர் டாக்டர் நளினி பார்த்தசாரதி, தமிழக சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புப் பிடாரன்கள் வடிவேல் கோபால்-மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, கேஜிஎஃப் புகழ் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகிய 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.