'நிர்பயா கொலை குற்றவாளி'... 'குடியரசுத் தலைவருக்கு புதிய மனு’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 07, 2019 10:21 PM
நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி வினய் சர்மா என்பவர், குடியரசுத் தலைவருக்கு புதிய மனு ஒன்றை அனுப்பியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில், துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு போராடிய நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில், சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியன உறுதி செய்தன. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா (23) தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தான் அனுப்பிய கருணை மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறி, குடியரசுத் தலைவருக்கு வினய் சர்மா கடிதம் அனுப்பியுள்ளார். ஏனெனில், உள்துறை அமைச்சகம் மூலம் அனுப்பிய கருணை மனுவில் இருப்பதே தனது கையெழுத்தே இல்லை என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் அனுப்பப்பட்டதாகவும் தற்போது கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.