வெங்கையா நாயுடு போட்ட ட்வீட்டால்.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆன இட்லிக்கடை.. சும்மா அள்ளுது கூட்டம்.. என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டணம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரோட்டோரத்தில் வாங்கிய நவதானிய இட்லி குறித்து டிவிட்டரில் போட்ட பகிர்வினால் இட்லிக் கடைக்காரர் பிரபலம் அடைந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மிகவும் சுவையான தானிய இட்லிகளை காலை உணவாக சாப்பிடுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
உடல்நலத்திற்கு நல்லது:
நறுமணமும், சுவையுடன் கூடிய இந்த தானிய இட்லிகளை சித்தம் சுதீர் என்னும் தொழில் முனையும் இளைஞரின் கடையில் இருந்து வாங்கியதாகவும், அது உடல்நலத்திற்கு நல்லது எனவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த பதிவின் மூலம் யார் இந்த இட்லிக் கடைக்காரர் என நெட்டிசன்கள் இடையே டிரென்ட் ஆனது.
நவதானிய இட்லி கிடைக்குமா:
அண்மையில் விசாகப்பட்டணம் வால்டர் பகுதில் அரசினர் ஒய்வு மாளிகைக்கு அருகே இருந்த சித்தம் சுதீரின் இட்லிக் கடைக்கு அரசுக் கார் ஒன்று வந்து நின்றுள்ளது. காரில் இருந்து இறங்கிய டிரைவர் சித்தம் சுதீரிடம் சென்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயிடுவிற்கு நவதானிய இட்லி தருமாறு கேட்டுள்ளார். இதனை கேட்ட இட்லிக் கடைக்காரர் சித்தம் சுதீர் ஆச்சரியமடைந்தார். இதோ ஒரு நிமிடத்தில் தருகிறேன் என உடனே மூன்று விதத்தில் நவதானிய இட்லியும், மூன்று வகையான சட்னியையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
நவதானிய சத்துக்களோடு நறுமணமும் சேர்ந்த இட்லி:
இதை சாப்பிட்டுவிட்டு தான் துணை ஜனாதிபதி இந்த கடை குறித்து ட்வீட் செய்துள்ளார். அதற்கு பின்னர் இந்த கடை பிரபலமானது. அந்த இட்லிகள் பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை இட்லிகள் போல் இருப்பதில்லை. ஒவ்வொரு நவதாநியத்தின் நிறத்திற்கு ஏற்ப அதனதன் நிறத்தில் இருக்கும்.
வழக்கமாக அலுமினிய அல்லது சில்வர் தட்டுகளில் வைத்து இட்லி அவிப்பார். ஆனால் இந்த இட்லியை திரளி போன்ற ஒருவகை இலையில் வைத்து தயார் செய்கிறார். மேலும் இது இட்லியில் உருவ அமைப்பிலும் இருப்பதில்லை. இது பொட்டலம் கட்டுவது போன்ற கோன் வடிவத்தில் காணப்படும். நீராவியில் அந்த இலையோடு வேகும்போது, நவதானிய சத்துக்களோடு நறுமணமும் சேர்ந்து விடுகிறது.
அம்மா எனக்கு செய்து தருவார்:
இதுகுறித்து சித்தம் சுதீர் கூறுகையில், "சிறு வயதில் என் அம்மா எனக்கு திணை வகை இட்லி செய்துக் கொடுப்பார். அந்த சுவை எனக்கு மிகவும் பிடித்து போனது.ஏன் இதை ஒரு தொழிலாக செய்யக் கூடாது என இட்லி தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் போகபோக சிறப்பான சுவையுடன் இட்லி வந்தது." என்று கூறியுள்ளார். பலவகை நவதானிய இட்லிகளுடன், பலவகை சுவையான சட்னியையும் சேர்த்து பரிமாறுவதால் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.