'உதட்டில் லிப்ஸ்டிக்'... 'ஒய்யாரமாக சேலையில் போஸ்'... 'இணையத்தை கலக்கிய புகைப்படம்'... அசத்தலான காரணத்தை சொன்ன இளைஞர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சேலை கட்டியவாறு இணையத்தில் பதிவிட்ட புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆண், பெண் என்ற பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என பலரும் பல கருத்துக்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். ஆணையும், பெண்ணையும் பாலின ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் உடையிலிருந்து முதலில் அந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்பது பேஷன் உலகில் இருப்பவர்களின் முக்கியமான கருத்தாகும்.
ஆண்கள், பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட உடை என எதுவும் இல்லை, யார் வேண்டுமானாலும் எந்த உடையையும் உடுத்தலாம் என பேஷன் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாகக் கொல்கத்தா இளைஞர் ஒருவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
இத்தாலியில் வசித்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த புஷ்பக் என்ற இளைஞர், பச்சை நிறத்திலான சேலையை அணிந்து கொண்டு தனது உறவினர்களுக்கும், மாநில மக்களுக்கும் வங்காள புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் ஏப்ரல் 15 ஆம் தேதி வங்காள புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புஷ்பக், பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பச்சை நிற சேலை அணிந்திருப்பதுடன், சிவப்பு லிப் ஸ்டிக் மற்றும் ஐ ப்ரோவும் எடுத்துள்ளார். இதே புஷ்பக் கடந்த ஆண்டும் லிப் ஸ்டிக் அடித்திருக்கும் புகைப்படத்தைத் தனது தாய்க்கு அனுப்பியபோது அக்கம்பக்கத்தினர் பலரும் கடுமையாக விமர்சித்ததாக இணையத்தில் தெரிவித்திருந்தார். ஒரு கட்டத்தில் அவரது தாயும் புஷ்பக்கை கண்டித்துள்ளார்.
இதையடுத்து அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த புஷ்பக் அடுத்த நாளும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் அடித்து புகைப்படம் பதிவிட்டதுடன், அக்கம் பக்கத்தினருக்கும் லிப்ஸ்டிக்கை பார்சல் அனுப்பினார். விரைவில் மீண்டு வாருங்கள் என்றும் கேப்சனிட்டிருந்தார். அவரின் இந்த பதிலடி இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே ஆண்கள் பெண்களின் உடையை அணிவதும், பெண்கள் ஆண்களின் உடையை அணிந்து கொள்ளும் புதியவகை பேஷன் மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்தி நடிகர்களான ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரான, ஜிம் சர்ப் ஆகியோரும் இதுபோன்ற ஸ்டைல்களை முயற்சி செய்துள்ளனர். ரன்வீர் சிங் ஹீல்ஸ் வைத்த செப்பல் மற்றும் அதற்கேற்ற உடையை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.