‘அடுத்த அதிரடிக்கு கிளம்பிய எதிர்ப்பு’... ‘உங்க குழந்தைங்க எல்லாம் எங்க படிச்சாங்க’... ‘கொந்தளித்து பேசிய ஜெகன்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Nov 11, 2019 07:09 PM
தற்போது பிறப்பித்த உத்தரவு ஒன்றுக்கு எதிர்ப்பு கிளம்பியதற்கு, ஜெகன் மோகன் ரெட்டி தக்க பதிலளித்துள்ளார்.
ஆந்திராவில் அடுத்த கல்வியாண்டு முதல் (2020- 2021), அங்குள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டதுடன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலும், பின்னர் படிப்படியாக 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கற்பிக்க நடைமுறைக்கு வருகிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு, தனியாக ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவைகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளநிலையிலும், தெலுங்கு மற்றும் உருது மொழி கட்டாய பாடமாக இருக்கும் என்று ஜெகன் மோகன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு, முன்னாள் ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மற்றும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆந்திர மக்கள் எதற்காக, ஆங்கில வழி கல்வி கற்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஜெகன், 'நான் சந்திரபாபு நாயுடுவை பார்த்துக் கேட்கிறேன். சார். உங்களின் மகன் எந்த மீடியத்தில் படித்தார்? உங்களின் பேரன் எதில் படிக்கப் போகிறார்? இதே கேள்வியை நான் வெங்கய்ய நாயுடு மற்றும் பவன் கல்யாணிடமும் கேட்கிறேன். ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளும் சிறப்பாகக் கல்வி கற்று, உலகளாவிய அளவில் போட்டி போடுவதற்கு, ஆங்கில வழிக் கல்வியில் அவர்கள் படிக்க வேண்டும்.
யாருக்காவது வேலை வேண்டுமெனில் அவர் ஆங்கிலம் கற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் நம்மால் மற்றவர்களுடன் போட்டி போட முடியாது. நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கப் போராடுகிறேன். அதற்காகவே அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது' என்று கூறியுள்ளார்.