'42 வருஷத்துக்கு அப்புறம் இது நடந்துருக்கு!'.. வெற்றிகரமாக நடந்த 'லண்டன்' மிஷன்!.. 'கெத்து' காட்டிய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியா42 ஆண்டுகளுக்கு பின் லண்டனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை நேற்று தமிழக போலீசாரிடம் மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை , அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 1978ல் திருடு போன ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவர, வரலாற்று மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் லண்டன் இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தூதரக அதிகாரிகள் லண்டன் போலீசில் புகார் அளிக்க, லண்டனில் உள்ள 'டீலர்' ஒருவரிடம் இந்த சிலைகள் இருப்பது சிங்கப்பூர் சிலைகள் மீட்பு பணிக்குழு நிர்வாகி விஜயகுமார் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த டீலரிடம் லண்டன் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து சிலைகளை ஒப்படைத்து விடுவதாக கூறினார். அதன்படி 42 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன ராமர் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன.
பின்னர் பிரிட்டன் அரசு அந்த சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்ததை அடுத்து, டெல்லி தொல்லியல் துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளதாக பிரகலாத் சிங் படேல் குறிப்பிட்டுள்ளார்.
