'என்னாச்சு ஸ்டார் ஜோடிக்கு'... 'திடீரென காணாமல் போன பெயர்'... 'இன்ஸ்டாவில் பறந்த கேள்விகள்'... ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2015ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் டினா டாபி. ஜெய்ப்பூரை பூர்விகமாகக் கொண்டது டினா டாபியின் குடும்பம். இவரைப் போலவே ஆதார் அமீர்கான் 2015 சிவில் சர்வீஸ் தேர்வில் 2-ம் இடம் பிடித்தவர். காஷ்மீரை பூர்விகமாக கொண்டவர் ஆதார் அமீர்கான். யு.பி.எஸ்.சியில் தேர்வில் வென்ற பிறகு இருவரும் முசோரியில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட அது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் கடந்த 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ஆதார் அமீர்கானும், புத்த மத்தைச் சேர்ந்த டினா டாபியும் ஒன்று சேர்ந்தனர். 2018ல் இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியரின் திருமணத்துக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் வாழ்த்தினர். குறிப்பாக வெங்கையா நாயுடு, அப்போதைய மக்களவைத் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே இவர்களின் திருமணத்தை 'லவ் ஜிஹாத்' என இந்து மகாசபை விமர்சனம் செய்தது. சிலர் விமர்சனங்கள் செய்த போதும் இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அடியெடுத்து வைத்தனர். சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக இருந்த நிலையில், இந்தியாவின் `ஸ்டார் ஜோடியாக' வலம் வந்தனர். திருமணத்துக்குப் பின் இருவரும் ராஜஸ்தான் கேடரில் ஜெய்ப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் தனது பெயரிலிருந்து 'கான்'-ஐ நீக்கினார் டினா டாபி. எப்போதும் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டினா டாபியின் இந்தச் செயல் அப்போதே அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்தது. அதேபோல், இன்ஸ்டாகிராமில் ஆதார் அமீர்கானும் டினாவை அன்பாலோ செய்தார். இதை வைத்து அவர்களுக்கு எதோ நடக்கிறது என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது விவாகரத்து வரை விவகாரம் சென்றிருக்கிறது.