ஆந்திரா தொழிற்சாலையில் ‘விஷவாயு’ கசிவு ஏற்பட்டது எப்படி?.. வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரா தொழிற்சாலையில் விஷவாயு கசிவு எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரிட்ஜ், குளிர்விப்பான் மற்றும் தெர்மோகோல் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. கடந்த 1961ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஆலை பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு தென்கொரியா எல்ஜி நிறுவனத்தின் கைகளுக்கு 1997ம் ஆண்டு வந்தது. அந்நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி 1800 டன் அளவுக்கு ஸ்டைரீன் வாயு திரவ நிலையில் ராட்சத டாங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் 40 நாட்களாக ஆலை செயல்படாமல் இருந்தது. தற்போது ஆலை திறக்க தளர்வு அறிவிக்கப்பட்டு ஆலை செயல்பட அனுமதி கிடைத்ததும், பணியாளர்கள் முதற்கட்ட பராமரிப்பு பணியை மேற்கொண்டு, இயந்திரங்களை இயக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். நீண்ட நாள்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாலும், வெப்பநிலை மாற்றத்தாலும், ஸ்டைரீன் இருந்த டாங்குகளில் சில வேதி வினைகள் தாமாகவே நடந்திருக்கின்றன. அதனால் திரவ நிலையில் இருந்த ஸ்டைரீன் ஆவியாக கசிந்து புகையாக வெளியேறி இருக்கிறது.
ஸ்டைரீன் வாயுவை உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் வகையிலான சைரன்கள் ஆலையில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வெளியான வாயு வேதிமாற்றம் அடைந்ததால் சைரன்கள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. வேதிவினைகளுக்கு உள்ளான ஸ்டைரீனை சமநிலைப்படுத்துவதற்கு போதுமான ரசயானங்களும் ஆலையில் இல்லை என கூறப்படுகிறது.
ஒரு மணிநேரத்துக்குள்ளாக கசிவு நிறுத்தப்பட்டாலும், அதற்குள்ளாக கசிந்து வெளியான வாயு காற்றில் பரவி மக்களை பாதித்திருக்கிறது. உடலுக்குள் சென்ற வாயு நுரையை உருவாக்கி உயிரை பறித்திருக்கலாம் என கூறுப்படுகிறது. எல்ஜி பாலிமர்ஸ் போன்று ஏராளமான ஆலைகல் ஸ்டைரீன் வாயுவை பயன்படுத்திருகின்றன. இந்த ஆலைகளும் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.