உற்பத்தி மந்தம்.. வியாபாரமும் 'சரியா' இல்லை. 'மொத்தமா' ஆலையை மூடும்.. 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 25, 2019 10:37 PM
ஜப்பானை சேர்ந்த வாகன நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்தபோது முதன்முறையாக தொடங்கிய கிரேட்டர் நொய்டா ஆலையை மூட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வாகன உற்பத்தி மந்த நிலையில் இருக்கிறது என்றாலும், கடந்த 4 வருடங்களாகவே ஹோண்டா நிறுவனத்துக்கு விற்பனை மந்தமாக தான் இருக்கிறது.இதனால் தட்டுத்தடுமாறி தான் அது நிகர லாபத்தை அடைந்து வந்தது.

இதுவரை இல்லாத வகையில் நாட்டின் வாகனச் சந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக் சரிவை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் ஹோண்டா நிறுவனம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்டில் 17,200 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா, 2019 ஆகஸ்டில் 8,291 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இதனால் இந்தியாவில் வாகன உற்பத்தியை சீர் செய்யும் நிலைக்கு ஹோண்டா தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் முதன்முறையாக தொடங்கிய நொய்டா ஆலையை ஹோண்டா மூடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு 1.2 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த ஆலையில் தற்போது மாதம் 2500 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒருவேளை தேவை ஏற்பட்டால் மீண்டும் ஆலையை விரிவுசெய்து உற்பத்தியை தொடங்கலாம் என்னும் முடிவுக்கு ஹோண்டா வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அங்கு ஹோண்டாவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகள் வழக்கம் போல இயங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் முதலாவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியேறியது. ஃபோர்டு கார் நிறுவனமும் நேரடி வர்த்தக்கத்தை மஹிந்திராவிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்துள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனமும் ஒரு ஆலையை மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
