'என்னோட சாவுக்கு'...'இந்திய அரசு தான் காரணம்'...அதிரவைத்த 'இன்ஜினீயரின் தற்கொலை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 03, 2019 03:27 PM
ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இன்ஜினீயரின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அவர் என்னுடைய தற்கொலைக்கு இந்திய அரசு தான் காரணம் என,எழுதி வைத்துவிட்டு,தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அஸ்ஸாமில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் இன்ஜினீயாராக பணியாற்றி வருபவர் பிஸ்வாஜித் மஜும்தார். இவருக்கு கடந்த 28 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை.இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.இதற்கு காரணம் அசாமில் உள்ள நாகோன் ஆலை மூடப்பட்டது தான்.ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் கீழ் இந்த ஆலை,கடந்த 2015-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனிடையே கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்து, தேர்தலில் பாஜக வென்றது.ஆனால் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை.
மாறாக 2017-ம் ஆண்டு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மற்றொரு யூனிட்டும் மூடப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ``எங்கள் வாழ்க்கையைக் கண்ணியமாக வாழ முடியவில்லை என்றால் இறப்பதே மேல்” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கடிதம் எழுதினார்கள்.ஆலை மூடப்பட்டதன் விளைவாக,அதன் பாதிப்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 51 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனிடையே தற்கொலை செய்து கொண்ட பிஸ்வாஜித் மஜும்தார் தன்னுடைய வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 'எனது மரணத்துக்கு இந்திய அரசாங்கம்தான் காரணம்” என எழுதியுள்ளார்.
இதனிடையே பிஸ்வாஜித் இறப்பதற்கு முந்தைய நாள் தான் அதே காகித ஆலையில் பணியாற்றிய டெக்னீசியன் ஒருவர் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளார்.தங்களுடன் பணியாற்றிய ஊழியர்கள்,தங்கள் கண் முன்பே உயிரிழப்பதை காண்பது மிகவும் கடினமான ஒன்று என,ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் வேதனையுடன்கூறியுள்ளனர்.பிஸ்வாஜித் மஜும்தார் மரணம்,அஸ்ஸாம் பேப்பர் மில் ஊழியர்களின் நிலையை மீண்டும் மீண்டும் நாட்டிற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.