'திரும்பவும் அதை செய்ய முயற்சிக்காதீங்க'... 'எச்சரிக்கை விடுத்த ராணுவ தளபதி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jul 26, 2019 04:02 PM
கார்கில் ஊடுருவல் போன்ற தவறை, சாகாசம் என்று நினைத்து பாகிஸ்தான் மீண்டும் செய்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது.
இந்தப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார்கில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராணுவ தளபதி பிபின் ராவத், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘1999-ம் ஆண்டை போன்று மறுபடியும் ஒரு ஊடுருவலை பாகிஸ்தான் ஒரு போதும் செய்யாது. அவ்வாறு அந்நாடு தவறான சாகசத்தில் ஈடுபடுமானால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பிணத்தைத் தான் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும்' என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
