'எப்படி சார் மேனேஜ் பண்ணுனீங்க'...' ஒரே ஒரு ஆள்'... 'மூணு இடம்'...'30 வருசமா அரசுக்கு டிமிக்கி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 26, 2019 01:11 PM
ஒரே ஆள் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளமும் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அரசு வேலை என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்காக பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருடந்தோறும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். தனியார் வேலையில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் அரசு வேலைக்கான போட்டி என்பது தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த சூழ் நிலையில், ஒரே ஆள் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளமும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை நாடு முழுவதும் கொண்டு வந்தது. இதன் மூலம் பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராம் என்பவர், மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக ஒரே பெயர் கொண்ட நபர் அரசு துறைகளில் பணியாற்றுவது என்பது இயல்பான ஒன்று தான்.
ஆனால் ஒரே பெயர், ஒரே விலாசம் கொண்ட நபர் மூன்று அரசு துறைகளில் பணியாற்றி வந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும் குழப்பதையும் அளித்துள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் வந்து உயர் அதிகாரிகளை சந்திக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சுரேஷ் ராம் வெறும் பான் கார்டு, ஆதார் கார்டுடன் சென்று அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த அதிகாரி, பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரச்சொல்லி அனுப்பியுள்ளார். இதனால் உஷாரான சுரேஷ் ராம், தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து அவரை தேடி வந்த காவல்துறையினர் சுரேஷ் ராமை தற்போது கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.
பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஒரு அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கியுள்ள சுரேஷ் ராம், பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் எவ்வாறு அரசை ஏமாற்றி வேலை வாங்கினார் என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.