'அடடா அமேசான்ல கூட இப்படி ஒரு ஆஃபர் இருக்காது'... 'பெருசா ஆசைப்பட்ட டாக்டர்'... சிறுசா பிளான் போட்டு 19 லட்சத்தை சுருட்டிய நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், குயிக்கர் (Quikr) என்னும் ஆன்லைன் சந்தையில் கணக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் மருத்துவரிடம் ஒருவர் பழக்கமான நிலையில், இந்தியாவில் 80,000 ரூபாய்க்கு கிடைக்கும் ஐ போனை, துபாயில் இருந்து 45,000 ரூபாய்க்கு வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மருத்துவர், சம்மந்தப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட பணம் முழுவதையும் அனுப்பவும் செய்துள்ளார்.
ஆனால், அவர்கள் ஐ போனை அனுப்பாமல் தாமதித்து வந்துள்ளனர். இதனால் கடுப்பான மருத்துவர், அவர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். அதற்கு மறு தரப்பில் இருந்து பேசிய மர்ம நபர், துபாயில் இருந்து கொண்டு வரவுள்ளதால் அதற்காக விற்பனை வரி மற்றும் இன்ன பிற வரிகளைக் கட்ட இன்னும் அதிக பணம் வேண்டும் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஐந்து ஐ பேட்கள், ஐந்து வாட்ச்கள் மற்றும் இரண்டு லேப் டாப்கள் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பல விலை மதிப்புள்ள பொருட்கள் வரப் போகிறது என்பதை நம்பி, மொத்தமாக இரண்டு மாதங்களில் சுமார் 19 லட்சம் ரூபாய் வரை மருத்துவர் அனுப்பியுள்ளார். பணம் மட்டும் சென்று கொண்டே இருக்க, ஒரு பொருள் கூட தனக்கு கிடைக்கப் பெறாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர், போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சமீப காலங்களில் இந்தியாவில் அதிக அளவில் ஆன்லைன் மூலம் மோசடி நிகழ்ந்து வருகிறது. அரசு மற்றும் காவல்துறை சார்பில் பல விழிப்புணர்வு, பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட போதும், தொடர்ந்து பலர் ஏமாற்றமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.