எங்க நாயை தயவு செஞ்சு ஒப்படைச்சிடுங்க... ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விநோதம்... தெனாலிராமனைப் போல் முடிவெடுத்த எஸ்.ஐ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 18, 2020 10:08 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் காணாமல் போன ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவால் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2 people own a missing dog -brilliantly executed S.I.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் மாவட்டத்தில்  நிர்மல்சிங் என்பவர் கடந்த மாதம் 26-ந் தேதி தனது நாயை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அமித்குமார் என்பவர் ஒரு நாயை காசீப்பூர் ரயில் நிலைய பகுதியில் இருந்து மீட்டு வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டார். அதை பார்த்த நிர்மல்சிங் நேற்று முன்தினம் அமித்குமார் வீட்டுக்கு சென்று தனது நாயை ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதே சமயத்தில் அனுராக் சவுகான் என்பவரும் அமித்குமார் வீட்டுக்கு வந்து அந்த நாய்க்கு சொந்தம் கொண்டாடினார்.

ஒரே நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் யாரிடம் நாயை ஒப்படைப்பது எனத் திணறிய அமித்குமார், பிரச்சனையை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். சப்-இன்ஸ்பெக்டர் மதன் இதுகுறித்து விசாரித்தார்.

2 பேர் சொந்தம் கொண்டாடிய நாய் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய்க்கு சொந்தம் கொண்டாடிய 2 பேரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து புத்திசாலித்தனமாக நாயை அவிழ்த்து விட்டார்.

அந்த நாய் 2 பேரிடமும் சென்று வாலை ஆட்டியபடி நின்றது. இதனால் குழம்பிப் போன எஸ்.ஐ. மதன் நாயை ஒப்படைக்காமல் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே பாதுகாப்புடன் வைத்திருந்தார்.

இதையடுத்து, நேற்று காலை சப்- இன்ஸ்பெக்டர் மதன் புதிய முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொண்டு போய் அந்த நாயை அவிழ்த்து விட்டார். உடனடியாக அந்த நாய் நிர்மல்சிங் வீட்டுக்கு தேடி சென்றது.

தனது நாய் திரும்ப வந்ததால் நிர்மல்சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நாய்க்கு உரிமை கொண்டாடிய அனுராக் சவுகான் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றார். நீதிக்கதைகளில் வரும தெனாலிராமனைப் போல் புத்திசாலித்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ. மதனை பலரும் பாராட்டினர்.

Tags : #MISSING DOG #OWNERS URGE #BRILLIANT S.I.