EXCLUSIVE: "பெரிய ஹீரோக்களின் படம், குறைவான நாட்களில் முடிப்பது சரியா.?" - டைரக்டருக்கு அட்வைஸ்
முகப்பு > சினிமா செய்திகள்சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இயக்குநர் சுந்தர்.சியின் உதவியாளரான கதிர்வேலு இயக்கும் ராஜவம்சம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் விஜயகுமார், சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், ரேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கூட்டு குடும்பத்தின் சந்தோஷத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ராஜவம்சம் குறித்து இயக்குநரிடம் பேசினோம். இது குறித்து டைரக்டர் கதிர்வேலு கூறுகையில், 'முதல் படத்திலேயே 40க்கும் அதிகமான நட்சத்திரங்களை வைத்து இயக்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அதிலும் சசிகுமார், ராஜ்கபூர், சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா என பல இயக்குநர்களை ஒன்றாக இயக்கியது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவங்களை கொடுத்துள்ளது. படப்பிடிப்பின் போது ஒவ்வொருவருக்கும் தனியாக சீன் சொல்ல முடியாது. அதனால் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றாக அமரவைத்து, கட்சி மீட்டிங் நடத்துவது போல் சீன் சொல்வேன். எந்த ஈகோவும் இன்றி அனைவரும் கொடுக்கப்பட்ட வசனங்களை பேசி நடித்து கொடுத்தனர். இதுவரை டார்க் படங்களுக்கே இசையமைத்து வந்த சாம்.சி.எஸ் இப்படத்தில் கமர்ஷியலான இசையை கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார்' என கூறினார்.
மேலும், டீசரை பார்த்த இயக்குநர் சுந்தர்.சி என்னை வெகுவாக பாராட்டினார். அத்துடன் சேர்த்து ஒரு அட்வைஸையும் வழங்கினார். இந்த படத்தை நான் மிக குறுகிய நாட்களில் படமாக்கி முடித்துவிட்டேன். அதையறிந்த சுந்தர்.சி, 'குறைவான நாட்களில் படத்தை எடுத்து முடிப்பது நல்ல விஷயம் தான், ஆனால் பெரிய ஹீரோக்களின் படம் என வருகிற போது, இத்தனை கம்மியான நாளில் படத்தை முடிப்பதால், படத்தின் தரம் எப்படி இருக்குமோ என நட்சத்திரங்களிடையே தயக்கம் உருவாகும், அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்' என சுந்தர்.சி கூறியதாக கதிர்வேலு தெரிவித்துள்ளார்.
குடும்பங்களை மையமாக வைத்து கமர்ஷியலாக உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்பரேட் அரசியல் நம்மை எப்படி தாக்குகிறது என்ற வலிமையான களத்தையும் சேர்த்திருப்பதாக இயக்குநர் கதிர்வேலு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.