தர்பார் இசை வெளியீட்டில் தான் தமிழ்நாட்டுக்கு ரயிலேறி வந்த நெகிழ்ச்சியான கதையை கூறிய ரஜினி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Rajinikanth shared the story of how he first came to Tamilnadu by train in Darbar Audio Launch.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய ரஜினிகாந்த், ”சுபாஸ்கரன் குறுகிய காலத்தில் எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். இந்தியாவில் அவரை பலருக்கு சினிமா தயாரிப்பாளராக மட்டும் தான் தெரியும்.

ஆனால் லண்டனில் அவர் பெரிய தொழிலதிபர். அங்குள்ள ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை தந்திருக்கிறார். அந்நாட்டில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று சுபாஸ்கரனை தெரியாதவர்கள் யாருமே கிடையாது.

இங்கிலாந்து அரசாங்கம் மக்களுக்கு செய்த பல நலத்திட்டங்களுக்கு சுபாஸ்கரன் லட்சக்கணக்கான பவுண்டு நிதியுதவி செய்திருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமை.

10 நாள் முன்பாக சுபாஸ்கரன் என்னை அழைத்து உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டு வர கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு, லண்டனில் ஒரு பூங்காவுக்கு என் பெயரை சூட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பேசி ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி என்னை வந்து ரிப்பன் கட் பண்ண அழைத்தார். நான் மறுத்துவிட்டேன்.

இவர் தயாரிக்கும் படத்தை, யார் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். எனக்கு ஏ.ஆர்.முருகதாசின் நினைவு வந்தது. அவர் எடுத்த ரமணா படத்தின் கருத்து, படமாக்கப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். கஜினி பார்த்த பிறகு இவருடன் நிச்சயம் படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது அவர் ஹிந்தி கஜினியில் பிசியாக இருந்தார். அவர் சொன்ன ஒன் லைன் பிடித்திந்ததால்  காத்திருந்தேன். அப்போது ஷங்கர் எந்திரன் படம் பண்ண கேட்டதால் பின் அது தள்ளிப்போனது.

சிகிச்சைக்கு வெளிநாடு போய் வந்த பிறகு இனி டூயட் எல்லாம் வேண்டாம் என்று கபாலி, காலாவில் நடித்தேன். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் பேட்டையில் என்னை தொண்ணூறுகளில் பார்த்தது போலவே காட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்த படத்தை பார்த்து விட்டு முருகதாஸ் அழைக்க உடனடியாக தர்பார் தொடங்கினோம்.

படப்பிடிப்பில் முருகதாசை இயக்குநர் என்றால் யாருமே நம்ப மாட்டாங்க. அங்கு இருந்ததிலேயே குள்ளமான, ஒல்லியான ஆள் அவர் தான். சீன் நன்றாக வந்தால் ரசித்து கை தட்டுவார், விசில் கூட அடிப்பார். ஆனால், கோபத்தில் கத்தினால் சத்தன் ஜெனரேட்டரை விட பலமா கேட்கும்’ என கூறினார்.

பின்னர் ரஜினி தான் முதல் முறையாக தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்த கதையை கூறினார். ’பெங்களூரில் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது எனக்கு படிக்கவே விருப்பம் இல்லை. எதாவது வேலைக்கு போகலாம் என்றிருந்தேன். என் அண்ணன் விடல்லை.

பெரிய கல்லூரி ஒன்றில் என்னை சேர்த்து விட்டார். ஒரு நாள் தேர்வுக்கு கட்ட எனக்கு பணம் கொடுத்தார். எனக்கு பாஸ் ஆவேன் என்று நம்பிக்கையே இல்லாததால் தமிழ்நாட்டுக்கு ரயில் ஏறினேன்.

வந்த இடத்தில் ஒரு டிக்கெட் செக்கர் என்னிடம் டிக்கெட் கேட்டார். ரயிலில் தூங்கிக் கொண்டே வந்ததால் டிக்கெட் என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னை அபராதம் கட்ட சொன்னார். நான் சொல்வதை நிரூபிக்க அழாத குறையாக முயன்றேன்.

அப்போது அங்கிருந்த கூலிக்கு சுமைதூக்குபவர்கள் எனக்காக பரிந்து பேசி தங்களிடம் இருந்த பணத்தை டிக்கெட் செக்கரிடம் நீட்டினர். நான் என்னிடம் இருந்த பணத்தை காட்டி, என்னிடம் பணம் இருக்கிறது, வரும் வழியில் டிக்கெட் தொலைந்து விட்டது என்று சொன்னேன்.

உடனே டிக்கெட் செக்கர் என்னை நம்புவதாக சொல்லி என்னை தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க அனுமதித்தார்.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.