''மோகன்லால் மாதிரி... '' - 'தம்பி' படம் குறித்து இயக்குநர் சொன்ன சீக்ரெட்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 01:32 PM
நடிகை ஜோதிகா மற்றும் கார்த்தி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘தம்பி’. இதனை 'பாபநாசம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்ததாவது, ''ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்துவருகிறேன். இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது. நான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ் கலாச்சாரத்தைச் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும்.
ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தியிருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்கு காரணமாக இருக்கிறது.
திரைப்படத்திற்கு மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை மலையாளத்திலேயே எழுதிக் கொடுங்கள். என்னுடைய உதவியாளரை வைத்து நான் மொழி மாற்றம் செய்துக் கொள்கிறேன் என்றார். எனது தாய்மொழி மலையாளம் என்பதால் தமிழ் எனக்கு எளிமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.
ஹிந்தி எனக்கு தெரியும். ஆனால், சரளமாக பேச தெரியாது. ஆகையால், ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தேன். நான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.