கலைத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரால் தொடங்கப்பட்ட கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சிந்து பைரவி, புன்னகை மன்னன், ரோஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களையும், பல சீரியல்களையும் தயாரித்து தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிலையில், இயக்குநர் கே.பாலச்சந்தரின் 79வது பிறந்தநாளையொட்டி, அவரது குடும்பத்தினரும், கலை குடும்பத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி நேற்று(ஜூலை.9) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பாக கவிதாலயா புரொடக்ஷன்ஸ் மற்றும் Behindwoods நிறுவனம் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை நடத்துகின்றனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் இயக்குநருக்கு வரும் டிசம்பர்.8ம் தேதி நடைபெறும் 7வது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். மேலும், கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெப் சீரிஸ் ஒன்று இயக்கும் வாய்ப்பும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.பாலச்சந்தரின் மகளும், கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் புஷ்பா கந்தசாமி பேசுகையில், ‘முழு நீள திரைப்படத்தை தயாரிக்க கூடுதல் நேரம் செலவாகும். அதனால், கவிதாலயா நிறுவனம் வெப் சீரிஸ்களை தயாரிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு முறை கே.பாலச்சந்தர், சீரியல், திரைப்படங்களை தொடர்ந்து இணைய திரையில் தரமான படைப்புகளை வழங்க ஆசைப்பாட்டார். தற்போது நான் அதனை செய்கிறேன்’ என கூறியுள்ளார்.
சமீபத்தில் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த வெப் சீரிஸான ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரகுமான்’ தற்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் இசை வடிவங்களையும், இசைக்கலைஞர்களையும் சந்தித்து, அவர்களுடன் நடத்திய உரையாடல், சேர்ந்து இசையமைத்து பாடிய அனுபவங்களே ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரகுமான்’ வெப் சீரிஸாக உருவானது. இது நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த குறும்பட போட்டி குறித்த கூடுதல் தகவல்கள் http://Behindwoods.com இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.